×

பாகிஸ்தான் அணி இயக்குனராக ஆர்தர்

ராவல்பிண்டி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பகுதி நேர பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஆர்தர் (54 வயது), ஏற்கனவே 2016 – 2019 வரை பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். இவரது பயிற்சியின் கீழ் 2017ல் பாகிஸ்தான் அணி டி20 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டவில்லை. மேலும், 2019 ஒருநாள் உலக கோப்பையில் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேற நேர்ந்தது. அதனால் ஆர்தர் விடுவிக்கப்பட்டு முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அறிவித்துள்ளது. ஆர்தர் பகுதி நேர பயிற்சியாளராக செயல்பட உள்ளார். அவர் இப்போது இங்கிலாந்தின் உள்ளூர் அணியான டெர்பிஷயரின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். அதற்கான 4 ஆண்டு ஒப்பந்தத்தில் ஓராண்டு மட்டுமே முடிந்துள்ளது. அதனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை போட்டியில் அவரால் முழுமையாக பாகிஸ்தான் விளையாடும் ஆட்டங்களுக்கு உடன் இருக்க முடியாது. எனினும், பிசிபி நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து இந்தியாவுக்கு எதிரான ஒரே ஆட்டத்தில் மட்டும் அணியுடன் இருக்க ஆர்தர் உறுதி அளித்துள்ளார்.

அதே சமயம் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் முழு நேரமும் பயணிப்பார் என்று கூறப்படுகிறது. மற்ற நேரங்களில் ஆன்லைன் மூலம் உத்திகளையும், ஆலோசனைகளையும் ஆர்தர் வழங்குவார். அவருடன் மற்ற பயிற்சியாளர்கள் தொடர்பில் இருப்பார்கள். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக மார்னி மோர்கெல் (38 வயது), பேட்டிங் பயிற்சியளராக ஆண்ட்ரூ புட்டிக் (42 வயது) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் தென் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியில் இயக்குனராக ஆர்தர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ‘இது பாகிஸ்தான் கிரிக்கெட் மீது விழுந்த அடி’ என்று மிஸ்பா உல் ஹக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

The post பாகிஸ்தான் அணி இயக்குனராக ஆர்தர் appeared first on Dinakaran.

Tags : Arthur ,Pakistan ,Rawalpindi ,Mickey Arthur ,Pakistan cricket ,South Africa ,Dinakaran ,
× RELATED பாக்.கின் ஃபத்தா-2 ஏவுகணை சோதனை